உலக அளவில் மின்சார கார்களை அதிகம் விற்பனை செய்யும் சீன நிறுவனமான BYD, தற்போது இந்தியா எலெக்ட்ரிக் கார் சந்தையில் கால்பதித்துள்ளது.
இந்தியாவிற்கு மின்சாரப் பேருந்துகளை ஏற்றுமதி செய்யும் BYD, இந்திய சந்தையினை மனதில் கொண்டு, தற்போது கார்களிலும் களம் இறங்கியிருக்கிறது. மற்ற கார்களை போல இதில் மேனுவல் கியர் பாக்ஸ் கிடையாது, ஆட்டோமேட்டிக் மட்டுமே. மின்சாரத்தை சேமித்து, பயண தூரத்தை கூட்ட Controller Area Network (CAN) எனும் தொழில்நுட்பத்தைப் பொருத்தியுள்ளார்கள்.
வீட்டில் தேவையில்லாமல் ஓடும் ஃபேன், லைட்டுகளை நிறுத்தி மின்சாரத்தை மிச்சம்பிடிப்பதுபோல, இந்தத் தொழில்நுட்பம், காரில் எந்தெந்த விஷயங்கள் எந்த நேரத்தில் தேவை என்பதை உணர்ந்து, அவற்றைத் தானாகவே ON, OFF செய்து, பேட்டரியை மிச்சப்படுத்தும்.
இந்த காரினை முழுமையாக சார்ஜ் செய்ய, ஒன்றரை மணிநேரம் தேவை. முழு சார்ஜில், 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த கார்களில் பிரேத்யேக பேட்டரி தொழில்நுட்பமும் உண்டு. அதாவது, இவர்கள் LiFePO4 எனும் பேட்டரியைத் தயாரித்து பயன்படுத்துகிறார்கள். இந்த பேட்டரிகள், டெஸ்லாவின் வாகனங்களில் வரும் NMC பேட்டரிகளைவிட எடை குறைவானவை, அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியவை மற்றும் அதிக நாட்கள் உழைக்கக்கூடியவை என, உலகின் முன்னணி மெட்டீரியல் இன்ஜினியர்களில் ஒருவரான Dan Steingart தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல அமெரிக்க மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு கடும்போட்டியாக, நவீன தொழில்நுட்பங்களோடு கார்களை உருவாக்கிவரும் இந்நிறுவனம், டெஸ்லாவை விட விற்பனையிலும் சரி, தொழில்நுட்பங்களிலும் சரி, மிகப்பெரிய நிறுவனம். உலகில், முதன் முதலில் ஒரே ஆண்டில் 1 லட்சம் மின்சார கார்களை விற்பனைசெய்த நிறுவனம் இது என்பது குறிபிடத்தக்கது.