பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், இரு தலைவர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அக்டோபர் 11ம் தேதி மாலை விமானம் மூலம் சென்னை வரும் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார். அதன்பின் இருவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மகாபலிபுரம் செல்கின்றனர். அக்டோபர் 11ம் தேதி இரவு மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்குகின்றனர். அக்டோபர் 12ம் தேதி காலை, மகாபலிபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகின்றனர். மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களுக்கு செல்லும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் மீனவ சமுதாய மக்களிடம் உரையாடிவிட்டு, மத்திய அரசின் மீனவ நலத்திட்ட பயனாளிகளையும் சந்திக்கின்றனர்.
அக்டோபர் 12ம் தேதி மாலை மகாபலிபுரம் கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் இரு தலைவர்களும் பொது விருந்தில் பங்கேற்கின்றனர். அக்டோபர் 13ம் காலை தனியார் விடுதியில் நடைபெறும் சந்திப்பில் இந்தியா – சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதன்பின் இருநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடனான பொது சந்திப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மகாபலிபுரத்தில் இருந்து புறப்படுகின்றனர். 2 நாட்கள் பயண திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருநாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருப்பதால் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்படவுள்ளது.