ஆசிய தடகளப் போட்டியில் சாதனைப்படைத்த இந்திய வீரர், வீராங்கனைகள்

வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின், தோஹா நகரில் 23ஆவது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 7 போட்டிகளை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் பெண்களுக்கான பிரிவில், இறுதியில் நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 20 புள்ளி 24 விநாடி நேரத்தில் வந்து இந்தியாவின் சுவப்னா 3ஆவது இடம் பிடித்தார்.இதையடுத்து மொத்தமாக 5 ஆயிரத்து 993 புள்ளிகள் பெற்ற அவர், வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப்போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எக்டரினா தங்கம் வென்றார். ஹெப்டத்லான் போட்டி, 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் என 7 பிரிவுகளை உள்ளடக்கிய கடினமான போட்டியாகும். இதில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான பூர்ணிமா 5வது இடத்தை பிடித்தார்.

இதேபோல் ஆசிய தடகளப் போட்டியில் 1,600 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் பூவம்மா, விஸ்மயா, ஆரோக்கிய ராஜிவ், முகமது அனாஸ் கூட்டணி 3 நிமிடம் 16 புள்ளி 47 விநாடிகளில் கடந்து, 2வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட தகுதிச் சுற்றில் இந்திய  வீராங்கனை டூட்டி சந்த், 23.33 விநாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலத்துடன், இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. 

Exit mobile version