இந்திய ராணுவ தியாகத்தால் சுதந்திரத்தை சுவாசிக்கும் வங்கதேசம்

பாகிஸ்தானில் மதம், மொழி காரணமாக நீண்ட காலமாக துன்புறுத்தல்களை சந்தித்து வந்த மக்களுக்காக இந்திய ராணுவம் யுத்தத்தை தொடங்கிய நாள். கிழக்கு வங்காளம் பங்களா தேசாக உருவெடுக்க இந்திய ராணுவம் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்து செய்தித் தொகுப்பு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் என்கிற புதிய நாடு உதயமானது. புதிய பாகிஸ்தானின் கீழ் பஞ்சாப்பின் ஒரு பகுதி, பலுசிஸ்தான், சிந்து, வங்காளத்தின் ஒரு பகுதி ஆகியவை இடம் பெற்றன. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டாலும் மொழியினால் வங்காளம் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. பாகிஸ்தானில் உருதுமொழி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானியர்கள் உருதுமொழியை ஏற்காததுடன் பாகிஸ்தானின் மொழித் திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். மேலும் பொருளாதார நலத்திட்டங்களிலும் மேற்கு பாகிஸ்தானுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தானை ஆட்சியாளர்கள் திட்டமிட்டே புறக்கணித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 6 விதமான கோரிக்கைகளை முன்வைத்தும் முஜிபுர் ரஹ்மான் என்பவர் தலைமையில் கிழக்கு வங்காளத்தில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 1971ல் search light என்ற ஆப்ரேசனை திட்டமிட்டு நடத்திய பாகிஸ்தான் கிழக்கு வங்காளத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக மதச்சிறுபான்மையினரான ஹிந்துக்கள் குறிவைத்துத் தாக்கி கொல்லப்பட்டதுடன் பெண்கள் மட்டும் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமென புள்ளி விவரங்கள் வெளியாகின

பாகிஸ்தானின் வன்முறைக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் இந்திய எல்லையில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் குடியேறினர். நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனிநாடு கேட்டுப் போராடி வந்த முக்தி பாகினி அமைப்புக்கு ராணுவ ரீதியாக உதவ ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவ நிலைகள் மீது 1971ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்ப ராணுவத் தளபதி மானெக்சாவுக்கு இந்திரா காந்தி ஆணையிட்டார். இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின. 13 நாட்கள் மட்டுமே நடந்த இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சுமார் 90 ஆயிரம் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லா தலைமையில் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்தப் போரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3000 வீரர்கள் உயிரிழந்ததுடன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்காளதேசம் என்ற தனிநாடு உருவானது. அதை முதல்நாடாக இந்தியா அங்கீரித்தது. போரில் வெற்றிவாகை சூடி பாராளுமன்றத்தில் நுழைந்த இந்திரா காந்தியை அன்றைய ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் துர்கா தேவி என வர்ணித்தார். இன்று வங்காள தேசம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று இந்திய ராணுவத்தின் தியாகத்தினால் கிடைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Exit mobile version