இந்தியா – அமெரிக்கா இடையிலான வணிக உறவு தொடர்பான பேச்சுக்கள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமை அலுவலகத்தில் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மினுச்சின் உடன் பேச்சு நடத்தினார். அதன்பின் ஏஎன்ஐ செய்தியாளருக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். உலகளாவிய பொருளாதார மந்த நிலை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்திருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வணிக உறவு குறித்த பேச்சு முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனால் விரைவில் ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டார். அமெரிக்க நிதியமைச்சருடனான பேச்சுக்கள் பயனுள்ள வகையில் அமைந்ததாகவும், நவம்பர் முதல்வாரத்தில் அவர் இந்தியா வரும்போது மீண்டும் பேச்சுக்கள் தொடரும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.