மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் அபார சதத்தால், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கியரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சென்னையில் நடந்த முதலாவது போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிபந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இந்தக் கூட்டணி 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 28ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அதேபோல், மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுலும் தனது 3ஆவது சதத்தைக் கடந்த நிலையில், 102 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களம் இறங்கிய கேப்டன் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் குவித்தது. இதனால் 388 ரன்களை இலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட நிலையில், ஷை ஹோப் 78 ரன்களிலும், அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய வீரர்கள் கணிசமான ரன்களை குவித்தனர். இறுதி கட்டத்தில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் சரிவுக்குள்ளான மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்ட நிலையில், அந்த அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. 3வது போட்டியில் வெற்றி பெறும் அணியே ஒருநாள் கோப்பையை கைப்பற்றும் என்பதால், அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த போட்டி, வரும் 22ம் தேதி, கட்டாக்கில் நடைபெற உள்ளது.