மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிக் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3-வது இருபது ஓவர் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் தொடக்கம் முதலே மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்திய அணி 8 ஓவர் முடிவடைவதற்குள் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எட்டியது.
சொந்த மைதானத்தில் வெறித்தனமாக ஆடிய துணை கேப்டன் ரோகித் சர்மா 34 பந்துகளில் 71 ரன்கள்(5 சிக்சர், 6 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் வழக்கம்போல தனது ஆர்வ கோளாறில் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்று எதிரணியினரிடம் கையில் கேட்சை கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ராகுலுடன் கைகோர்த்து அதிரடி காட்ட தொடங்கினார்.
ரோகித்துடன் சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல் 51 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் பந்தில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மற்றொரு முனையில் இருந்த விராட் கோலி, கடந்த போட்டியில் அடிக்க தவறிய ரன்களையும் சேர்த்து வெளுத்துக் கட்டினார். கடைசியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்த கோலி 70 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் பொல்லார்ட், வில்லியம்ஸ், காட்ரெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 241 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிக் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.