நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி ஆட்டம் இழந்தது.
இந்திய அணியில், முகமது சமி 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், சஹால், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து நிதானமாக ஆடினர். இந்திய வீரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 62 ரன்கள் குவித்தார். கேப்டன் கோலி 60 ரன்கள் எடுத்தார்.
43-வது ஓவரில் 3 விக்கெட்டு இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.