ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி முதல் தோல்வி

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது.

வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி 13 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கடைசியாக 2018-19 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஆஸ்திரேலிய பயணத்தின் போது இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் மைதானத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்திய அணி முதல் தோல்வியை தழுவி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகமானது. அதன்பிறகு, வெஸ்ட்இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) தொடர்களை கைப்பற்றி அசத்தியது. 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, தனது 8-வது போட்டியில் (நியூசிலாந்து அணிக்கு எதிராக) தோல்வியை சந்தித்துள்ளது.

இருப்பினும், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பட்டியலில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. மொத்தமாக  360 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இங்கிலாந்து 146, பாகிஸ்தான் 140 புள்ளிகளுடன் பட்டியலில் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 120 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version