இந்தியா போராடி வெற்றி!

நியூசிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மட்டும் டி20 போட்டிகள் விளையாடி வருகின்றனர். இதில் ஏற்கனவே ஒருநாள் போட்டியினை முழுமையாக இந்திய அணி வென்று கோப்பையை தனதாக்கிக் கொண்டது. கடந்த வெள்ளியன்று இந்த இரு அணிகளுக்கும் இடையே முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. அப்போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியினை வென்றிருந்தது. அதனையொட்டி நேற்று ஞாயிறு அன்று இரண்டாவது டி20 போட்டியானது உத்தரபிரதேசம் ஈகானா மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் தொடக்கத்தில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நேற்றைய ஆடுகளம் மிகவும் கடினமாகவும் ஸ்பின் பெளலிங்கிற்கு ஏற்றவாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பே உண்மையானது. நியூசிலாந்தினைப் பொறுத்தவரை களமிறங்கிய அனைவருமே சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அதிகபட்சமாக கேப்டன் சாண்டினர் மட்டும் 19 ரன்கள் சேர்த்து விக்கெட்டைப் பறிகொடுக்காமல் கடைசி வரை நின்றிருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியினர் 8 விக்கெட்டுகள் இழந்து 99 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது. இந்திய அணியின் பவுலிங்கைப் பொறுத்தவரை கேப்டன் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹால், தீபக் கூடா, குல்தீப், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும், அர்ஷதீப் சிங் இரண்டு விக்கெட்டினையும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

பிறகு களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடனே இருந்தது. சுப்மன் கில் 11, இஷான் கிஷான் 19, த்ரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். சூர்யகுமாரும், கேப்டன் பாண்டியாவும் இறுதிவரை நின்று பொறுமையாக விளையாடினர். சூர்யகுமார் 26 ரன்களுடனும், பாண்டியா 15 ரன்களுடனும் களத்தில் இறுதிவரை இருந்து 100 ரன்கள் இலக்கை எட்டினர். இலக்கை எட்டுவதற்கு இருபதாவது ஓவரின் ஐந்தாவது பந்து வரை ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. நியூசிலாந்து பெளலர்கள் தங்களின் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி இந்த குறைந்தபட்ச இலக்கினை இறுதிவரை எடுத்து சென்றார்கள். இருந்தாலும் அவர்களால் வெல்ல முடியவில்லை. மூன்று டி20கள் கொண்டத் தொடரை இந்த வெற்றியின் மூலம் இந்தியா 1-1 என்று சமன் செய்துள்ளது. வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி புதன்கிழமை மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெற உள்ளது. அதில் வெல்பவர்களுக்கே கோப்பை உறுதியாகும்.

Exit mobile version