தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 350வது விக்கெட்டினை வீழ்த்தி முரளிதரன் சாதனையை சமன் செய்தார். தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடிய தமிழர் முத்துசாமியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தார்.

இந்திய – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு, முதல் இன்னிங்சை இந்திய டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த போட்டியில் தான் இந்திய அணியின் ஒவ்வொரு வீரரின் சிறப்பான ஆட்டமும் வெளிப்பட்டது. குறிப்பாக ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் அடித்து அசத்தியதுடன் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல, இந்திய அணியின் முக்கிய வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் 5 ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா வீரர் தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற இலங்கையின் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல் ரவுண்டராக ஜொலித்த செனுரன் முத்துசாமி தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இளம் வீரர். அறிமுக வீரராக களம் இறங்கிய இவர், இந்த போட்டியில், 9 வது விக்கெட்டுக்கு டேன் பீட்டுடன் ஜோடி சேர்ந்து 91 ரன்கள் குவித்தார். 2 இன்னிங்ஸிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல், முதல் இன்னிங்கிஸில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மொத்தத்தில், இந்த போட்டியானது இரு அணியிலும் இடம் பிடித்த தமிழர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலே நடந்தது என்பதே சாலப் பொருந்தும்.

Exit mobile version