கொரோனா அச்சுறுத்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, சுயசார்பு திட்டத்தின் மூலம், இந்தியா இறக்குமதியை குறைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சுயசார்பு இந்தியா திட்டத்தில், தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் நிகழ்ச்சியை, காணொலி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடு தற்சார்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை, கொரோனா வைரஸ் பரவல் நமக்கு புகட்டி உள்ளது என கூறினார். பல ஆண்டுகளாக நாட்டின் நிலக்கரித்துறை வலையில் சிக்கியதை போல், சிறப்பாக செயல்பட முடியாமல் இருந்தது என்றும், இதனை மாற்ற 2014க்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.
தற்போதைய அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்திய நிலக்கரித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 2030க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக்க இலக்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், பிரதமர் மோடி கூறினார்.