''அத்துமீற முயன்றால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது'' – பிரதமர் மோடி

நட்புறவுக்கு இந்தியா மரியாதை கொடுக்கும் எனவும், ஆனால் அதே நேரத்தில் அத்துமீற முயன்றால் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அடுத்த படியாக, இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை சீனா சொந்தம் கொண்டாடியதால், எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் இல்லாமல் எல்லையில் சீனா ராணுவப் படைகளை குவித்ததால், கூடுதல் பதற்றம் தொற்றிக் கொண்டது. பலத்தை நிரூபிக்க இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்தது. எனினும், எல்லை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருநாடுகளும் முடிவு செய்தன. ராணுவ கமாண்டர்கள், தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டதால், சீனா தனது படைகளை பின்வாங்க சம்மதம் தெரிவித்தது. படைகளை திரும்பப் பெறும் தருணத்தில், கால்வான் பகுதியில் இருநாட்டு வீரர்களும் திடீரென கடுமையாக மோதிக் கொண்டனர். இருநாட்டு எல்லையை ஒட்டிய குறிப்பிட்ட பகுதிகளில், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தம் உள்ளதால், இந்திய வீரர்கள் மீது ஆணிகள் பொருத்தப்பட்ட கம்பியால் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் சீன தரப்பிலும் மரணங்கள் ஏற்பட்டன. எல்லை பிரச்னை மோசமான நிலைக்கு சென்றதால், மீண்டும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இந்நிலையில் நட்புறவுக்கு இந்தியா மரியாதை கொடுக்கும் என்றும், ஆனால் அத்துமீற முயன்றால் பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கிழக்கு லடாக்கில் நமது எல்லையில் அத்துமீறியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியாவின் வலிமையான நிலைப்பாட்டை உலக நாடுகள் பார்த்துள்ளன என்றும் கூறினார். துணிச்சல் மிகுந்த நமது ராணுவ வீரர்கள் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட விட மாட்டார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். தேசத்தை வலிமையாகவும், தற்சார்பு உடையதாகவும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி அதுதான் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Exit mobile version