இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 இன்று தொடங்குகிறது

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டி20 இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளூரில் நடைபெறும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும், மேற்கு இந்திய தீவுகள் அணி டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த ஆட்டம் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொல்லார்ட் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி, பேட்டிங்கில் அசத்தி வருகிறது. அந்த அணியில், அதிரடி வீரர் ஆன்ட்ரே ரசல் இடம்பெறவில்லை என்றாலும், அதிரடிக்கு பஞ்சம் இருக்காது எனக் கருதப்படுகிறது. இந்திய அணி பொறுத்த வரையில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் மட்டுமே, மேற்கு இந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்த முடியும். இந்த தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exit mobile version