உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக முடிவெடுப்பது குறித்த நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நடிகர்கள் பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதேபோல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக் கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆலோசிப்பதற்கான நிர்வாக குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் போன்றவையிடம் ஆலோசனை கேட்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தடை கோர இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி.யிடம் வலியுறுத்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாக கூறி இந்திய தரப்பில் தடை கோரவுள்ளது
முன்னதாக, திட்டமிட்டபடி இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெறும் என்றும் ஐ.சி.சி. கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.