நாளை முதல் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.
கொரோனா எதிரொலியாக இந்தியாவில் கடந்த மார்ச் இறுதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்கும் வகையில், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ், நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை இந்தியாவிற்கு 18 விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-நியூயார்க் இடையே தினமும் விமானங்கள் இயக்கப்படும் எனவும், டெல்லி-சான்பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு 3 நாட்கள் விமானங்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியா-பிரான்ஸ் இடையே ஏர் பிரான்ஸ் நிறுவனம் நாளை மறுதினம் முதல், விமான போக்குவரத்தை தொடங்கவுள்ளது. அந்த நிறுவனம் மும்பை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களுக்கும், பாரீசுக்கும் இடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 28 விமானங்களை இயக்கவுள்ளது.