"தமிழ்நாட்டிற்கு இந்தியா டுடே விருது"

இந்தியா டுடே பத்திரிகை சார்பாக, 12 பிரிவுகளின் கீழ் நடத்திய கணக்கெடுப்பில், ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான சிறந்த மாநிலத்திற்கான விருதினை, தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது வருடமாக பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா டுடே சார்பில் 2020 ஆம் ஆண்டுக்கான State of The States விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம், விவசாயம், கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், கட்டமைப்பு, உள்ளடக்க வளர்ச்சி, தொழில் முனைவோர் சுற்றுலா, சுற்றுச்சூழல், தூய்மை உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

இதில், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து செயல்படும் மாநிலம் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்களாக, தமிழ்நாடு இந்த விருதைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்து 263 புள்ளி 1 புள்ளிகள் பெற்று தமிழகம் முதலிடத்திலும், ஆயிரத்து 235 புள்ளி 1 புள்ளிகள் பெற்று இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா 4வது இடத்திலும், ஆந்திரா 7வது இடத்திலும், கர்நாடகா 11வது இடத்திலும் உள்ளன. முக்கியமாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழகத்தை விட 4 இடங்கள் பின்தங்கி 5வது இடமே பெற்றுள்ளது.

12 பிரிவுகளில் ஒன்றான உள்ளடக்க வளர்ச்சி பிரிவில், 68 மதிப்பெண்கள் பெற்றுள்ள தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதேபோல், பொருளாதாரம், கட்டமைப்பு, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, தொழில் முனைவோர்கள் ஈர்த்தல், தூய்மை ஆகிய பிரிவுகளில், தமிழ்நாட்டுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில், இந்த விருது தமிழக அரசுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ள இந்தியா டு டே, தொடர்ந்து மூன்றாவது முறையாக, விருதைப் பெறவுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்த விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிப்பதாகவும், தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பாணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே, தொடர்ந்து 3வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version