கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில், பயணிகள் இந்தியாவிற்கு வர, தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சீனா உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் நோய் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா உள்பட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் விசா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளை கண்காணிக்கவும் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில், பயணிகள் இந்தியாவிற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.