உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 8 வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. சவுதம்ப்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஹசிம் ஆம்லா 6 ரன்னிலும், குயிண்டன் டி காக் 10 ரன்னிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு களம் இறங்கிய வீரர்களின் கணிசமான ரன் குவித்த நிலையில், அதிரடியாக ஆடிய கிறிஸ் மோரீஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 227 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து களம் இறங்கிய கோலி 18 ரன்னிலும், கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், தோனி 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 2 சிக்சர் 13 பவுண்டரி உள்பட 122 ரன்கள் குவித்தார். 47 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த இந்தியா 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

உலக கோப்பையை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கிய நிலையில், தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி தனது 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வரும் 9 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version