இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர், நாளை தொடங்க உள்ள நிலையில், பார்வையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போட்டி நடக்கும் அசாம் மாநிலத்தில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகத் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகப் பார்வையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு வரும் பார்வையாளர்கள் செல்பேசி, பணப்பை ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீர் உள்ளே வழங்கப்படும் என அசாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.