இந்தியர்களை பற்றியோ, அரசியல் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்ட அவர்களது உரிமைகள் குறித்தோ கருத்து கூறுவதற்கு எந்த வெளிநாட்டு அரசுகளுக்கோ உரிமை இல்லை என்று இந்தியா சார்பில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த 21-ந் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “கடந்த ஆண்டு முழுவதும், இறைச்சிக்காக பசுக்கள் கொல்லப்படுவதாக எழுந்த வதந்தியின்பேரில், சிறுபான்மையினர் மீது இந்து குழுக்கள் நடத்திய கும்பல் தாக்குதல் தொடர்ந்தது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு பாஜக தரப்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ, 3 நாள் பயணமாக இந்தியா வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை தெரிவித்துள்ளார்.