கடிதத்தின் ருசியை வாட்ஸ்அப் தராது – 150 ஆண்டுகளை கடந்த இந்திய தபால்துறை!

கடிதம் மட்டுமே தகவல் பரிமாற்றத்திற்கான காரணியாக இருந்த காலம் முதல் இப்போது வரை 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தபால் சேவையை வழங்கி வரும் இந்திய அஞ்சல் துறையின் தினத்தில் அதன் பெருமைகளை பார்க்கலாம்.

இமெயில், பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று அதிநவீன தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டாலும், கடிதம் தரும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் வேறெதுவும் தந்துவிட முடியாது. தபால்காரருக்காக காத்திருந்து கடிதத்தை பிடித்து நம் அன்புக்குரியவர்கள் எழுதிய வரிகளை படிக்கும் ஆனந்தம் இருக்கிறதே, அடடா, அடடா.. அந்த காலம் போல் வருமா என்று எல்லோரையும் ஏங்க வைப்பது கடிதங்கள். அந்த கடிதங்களை கையாண்டு மக்களின் வாழ்வில் ஒரு பகுதியாக விளங்கியவை தபால் நிலையங்கள். பரந்துப்பட்ட இந்தியாவை இணைத்த கால்கள் தபால்காரர்களின் கால்கள். இன்று தபால் சேவையை பெரிதும் பயன்படுத்த யாரும் முன்வரவில்லை என்றாலும் அதற்கான தேவை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு, நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கொடுத்து வருகிறது இந்தியா போஸ்ட் எனப்படும் இந்திய அஞ்சல் துறை. ஒன்றரை லட்சம் அலுவலகங்கள், ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் என உலகின் மிகப்பெரிய துறையாக விளங்குகிறது இந்திய அஞ்சல் துறை.

அஞ்சல் சேவை மட்டுமல்லாமல் சிறு சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பில் வசூல் மற்றும் ஊதியம் கொடுத்தல் என வங்கி சார்ந்த சேவைகளையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் அக்டோபர் 10ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் மக்கள் மற்றும் வணிகங்களின் அன்றாட வாழ்க்கையில் தபால் துறையின் பங்களிப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும் . இந்நாளில் அஞ்சல் தலைகள் வெளியீடு மற்றும் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். குளிரோ, மழையோ, வெயிலோ, ஒருநாளும் முடங்கியதில்லை இந்திய தபால்துறை.

 

Exit mobile version