இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12 கோடியே 50 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ போல்டர் மற்றும் ரட்ஜெர் பல்கலைக்கழகங்கள் இணைந்து “எதிர்பாராத எதிர்க்கால மோதல் மற்றும் உலக பாதிப்பு” என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையினை “சயின்ஸ் அட்வான்ஸ்” என்ற இதழ் வெளிட்டுள்ளது. அந்த தகவல்களின் படி, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால், இரண்டாம் உலகப் போரை விட இருமடங்கு அதிகமாக உயிரிழப்பு இருக்கும் என்றும், போர் நடக்கும் பட்சத்தில் ஒரே வாரத்தில் 5 லட்சம் முதல் 12 கோடியே 50 லட்சம் பேர் வரை பலியாக கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன் மனித இனம் பார்க்காத போராக அந்த போர் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சனைக்காக இந்த இருநாடுகளும் இதற்கு முன்னர் பலமுறை போரிட்டிருந்தாலும், 2025ம் ஆண்டில் போர் ஏற்பட்டால், 400 முதல் 500 வரையிலான அணு ஆயுதங்கள் மொத்தமாக பயன்படுத்தப்படலாம் என்று அந்த ஆய்வறிக்கை குறிபிடுகிறது. தற்போது ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அவற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே தங்களது அணு ஆயுதக் கிடங்குகளை வெகு வேகமாக கட்டமைத்து வருகிறது. அதிகளவு மக்கள்தொகை கொண்ட நாடுகளாக இருப்பதால் உயிரிழப்பும் அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் வெடித்தால் ஒரே வாரத்தில் 1 கோடியே 60 லட்சம் முதல் 3 கோடியே60 லட்சம் டன் கார்பன் துகள்கள் காற்றில் கலந்து உலகம் முழுவதும் மாசை ஏற்படுத்தும். பூமிக்கு கிடைக்கும் வெளிச்சம் 20 முதல் 35 சதவீதம் வரை குறையும். இதனால் பூமியின் தட்பவெப்ப நிலையில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். உலகளாவிய அளவில் மழையும் 15 முதல் 30 சதவீதம் குறையும். இவை பருவநிலை மாற்றத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் விவசாயம் 30 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும்.
கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தி 15 சதவீதம் வரை குறையும். இவற்றால் ஏற்படும் மொத்த பாதிப்புகளில் இருந்து வெளிவர குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேலாகும் என தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இந்தியா எப்போதும் போரை விரும்பியது கிடையாது. ஆனால் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் சமீபத்திய பேச்சுகள் போரை விரும்புவதாகவே உள்ளது.
“போர் ஏற்பட்டால் அது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூலக் கூடாது என்பதே உலக நாடுகளின் கோரிக்கையாக உள்ளது”..