ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைப்பிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா(AVANI LEKHARA) தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைப்பிள் போட்டியின் தகுதி சுற்று நேற்றூ நடைபெற்றது. மொத்தம் 21 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த சுற்றில், இந்திய வீராங்கனை அவனி லெகாராவும் இடம் பெற்றார். போட்டியின் முடிவில், அவனி லெகாரா ஏழாவது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்வார் என்ற எதிர்பார்ப்பில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த இறுதிப்போட்டியில், அவனி லெகாரா முதல் இடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார். மேலும், இப்போட்டியின் மூலம், 249 புள்ளிகள் பெற்று உலக சாதனையையும் சமன் செய்து அவனி லெஹாரா அசத்தியுள்ளார்.
16வது பாராலிம்பிக்கில், வட்டு எறிதல் F56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்தூனியா(YOGESH KATHUNIYA) வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். இறுதி போட்டியில் 44 புள்ளி 38 மீட்டர் தூரத்துக்கு வட்டெறிந்து யோகேஷ் இரண்டாம் இடம் பிடித்தார்.
பாராலிம்பிக் ஈட்டி எறிதல் ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றம் வெண்கலம் என 2 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். ஈட்டி எரிதல் F46 பிரிவில், இந்திய வீரர் தேவேந்திரா 64 புள்ளி 35மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எரிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை தன்வசப்படுத்தினார். மேலும் இந்திய வீரர் குர்ஜார் சுந்தர் சிங் 64 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எரிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.
16வது பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைப்பிள் போட்டியில் அவனி லெகாரா தங்கம் வென்றார். டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் பவீனாபென் பட்டேல், வட்டெறிதல் ஆண்கள் பிரிவில் வினோத் குமார், ஆண்கள் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், ஈட்டி எரிதலில் தேவேந்திரா ஆகீயோர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். வட்டெறிதல் ஆண்கள் பிரிவில் வினோத் குமாரும், ஈட்டி எரிதலில் குர்ஜார் சுந்தர் சிங்கும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் ஒரு தங்க, 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 34 இடத்துக்கு முன்னேறியுள்ளது.
https://www.youtube.com/watch?v=B-gBj2a5t5Y