ஆஸி. அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களம் இறங்கிய ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த தவான் 74 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 47 ரன்களிலும், கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 255 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான தொடக்கம் தந்தனர். தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் சதம் அடித்த நிலையில், 37.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 258 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 128 ரன்களும், பிஞ்ச் 110 ரன்களும் குவித்தனர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது போட்டி ராஜ்கோட்டில் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version