எந்தவித சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது : பிபின் ராவத்

எல்லைப் பகுதிகளில் எந்தவிதமான பாதுகாப்புச் சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவை நீக்கப்பட்டதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாக உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு செய்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இதையடுத்து இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் அரசு முறித்தது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான பேருந்து ரயில் போக்குவரத்தை முன்னறிவிப்பின்றி முற்றிலுமாக நிறுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்த அவர், எந்தவிதமான பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version