இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சிலின் 45 ஆம் ஆண்டு தொடக்கவிழாவில், சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல் என்னும் தலைப்பில், பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினார். வாய்ப்புகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உருவாகி வருவதாகவும், சுகாதாரத்துறையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீத வளர்ச்சியை அடைந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் விமானப் போக்குவரத்து, காப்பீடு போன்ற துறைகளில் முதலீட்டுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்வதாகவும் கூறினார். பேரிடர் காலத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.