அமெரிக்காவின் சட்டத்தால் ரஷ்ய ஏவுகணைகளை வாங்குவதில் இந்தியாவுக்கு சிக்கல்

அமெரிக்காவில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஏவுகணைகளை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து பிற நாடுகள் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு உலகளாவிய தடையை விதித்துள்ள அமெரிக்கா இதற்காக காட்சா (CAATSA) என்ற சிறப்பு சட்டம் ஒன்றையும் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. இதன்படி, ரஷ்யாவிடம் இனி ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும்.
 
ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே ரஷ்யாவின் எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்திய இராணுவம் வாங்குவது தொடர்பாக 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அந்த ஏவுகணைகளை இந்தியா பெறுவதில் இப்போது சிக்கல் உண்டாகி உள்ளது.
 
ரஷ்யாவிடம் இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு எதிரான சட்டத்தில் உலகின் எந்த நாடுகளுக்கும் எந்த விலக்கும் கிடையாது – என்றும் அமெரிக்க தரப்பு வெளிப்படையாக அறிவித்து உள்ளதால், அமெரிக்காவின் இந்த தடைச் சட்டத்தால் இந்தியா – அமெரிக்க நல்லுறவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கினால் அதன்மூலம் அமெரிக்காவின் எஃப்-35 விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்றும், ரஷ்யாவுடன் இராணுவரீதியான பிணைப்பில் உள்ள நாடுகளுக்கு தங்கள் தொழில் நுட்பங்களை வழங்கினால் அவற்றை ரஷ்யா அறிந்து கொள்ளும் என்பதால், ரஷ்யாவுடன் இராணுவ ரீதியில் இணக்கமாக உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்காது என்றும் தெரிவித்து உள்ளார். அதே சமயம், இந்தியாவின் இராணுவ வலிமையைக் குறைக்கும் எந்தத் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும், இது குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.
 
அமெரிக்காவின் சட்டத்தை மீறி சமீபத்தில் ரஷ்ய ஆயுதங்களை இறக்குமதி செய்த துருக்கி நாட்டின் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது உள்ளதால், இந்தியாவின் அடுத்த கட்டத் திட்டம் என்ன என்பதை உலக நாடுகள் உற்று கவனித்துவருகின்றன.
 

Exit mobile version