விண்வெளி போரை முறியடிக்கும் சக்தியை இந்தியா பெற்றுள்ளது : மோடி

விண்வெளி ஆய்வில் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மூலம் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏ-சாட் ஏவுகணை மூலமாக விண்வெளியில் செயற்கைகோளை சுட்டுவீழ்த்தி தற்போது இந்தியா சாதனை படைத்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில் விண்வெளியில் நிகழ்த்திய இந்த சாதனை மூலம் விண்வெளி போரை முறியடிக்கும் சக்தியை இந்தியா பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை நாம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். விண்வெளியில் இந்தியா தனது சக்தியை இன்று பதிவு செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார். பூமியை நேரலையில் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு விண்வெளியில் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிற நாடுகளை அச்சுறுத்தும் நோக்கத்துடன் இந்த சோதனையை செய்யவில்லை என்ற தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்பிற்கான முயற்சியாகவே இந்த சாதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச உடன்படிக்கையை இந்தியா மீறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் அனைத்து செயற்கைகோள்களையும் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பாதுகாக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version