ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை அடுத்து அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்லா தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது கடந்த ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது. மேலும் தனது நட்பு நாடுகள் அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தது. இதை மீறும் நாடுகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவும் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை கைவிட அமெரிக்கா அறிவுறுத்தியது.
ஏற்கனவே உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையை சந்தித்துவரும் இந்தியா, ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை கைவிட முடியாது என்று தெரிவித்தது. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறியது.
இந்த சூழலில் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையிலிருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த நவம்பரில் அறிவித்தது. இந்த காலக்கெடு கடந்த 3ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ருங்கலா தெரிவித்துள்ளார்.