ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரக்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 தடுப்பூசிகளை அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இவை மட்டுமின்றி, மேலும் 4 தடுப்பூசிகளை அக்டோபர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் Biological E நிறுவனத்துடன் இணைந்து, johnson and johnson தடுப்பூசி, சீரம் நிறுவனத்துடன் இணைந்து Novavax தடுப்பூசி, ZYDUS CADILA தடுப்பூசி, BHARAT BIOTECH தடுப்பூசிகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒப்பிடுகையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் அதிகளவாக 92 சதவிகிதமாக உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70 சதவிகிதமும், கோவாக்சினின் செயல்திறன் 81 சதவிகிதமும் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் 95 சதவிகிதமும், மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன் 94 சதவிகிதமாகவும் உள்ளது.
Novavax தடுப்பூசியின் செயல்திறன் 89 சதவிகிதமாகவும், Johnson and johnson தடுப்பூசியின் செயல்திறன் 66 சதவிகிதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் தயாரிப்பான சினோவாக்ஸ் 50 சதவிகித செயல்திறன் மட்டுமே கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் தொடர்பான புகார்களையும் மறுக்க முடியாத நிலையில், அவை வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் போது ஏற்படும் சிறிய அளவிலான பாதிப்பு தான் என மருத்துவ வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் வரும் மாதங்களில் தடுப்பூசிகளின் தேவை அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு கருதுவதால், உலக அளவில் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதேவேளையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எத்தனை தடுப்பூசிகள் வந்தாலும், முகக்கவசம் அணிதல், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை மக்கள் கடைபிடிக்காதவரை, கொரோனாவை வெல்வது கடினமாகவே இருக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்….