புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலை மூடி மறைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அளித்த விளக்கத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என்றார். இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை என்றும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அதை ஆதரிக்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கதக்கது என்றும் குறிப்பிட்டுள்ளது. கொடூர தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்தும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் குறித்தும் சமர்பிக்கப்பட்ட ஆதாரத்தையும் பாகிஸ்தான் பிரதமர் நிராகரித்து வருவதாகவும், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அஸார் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதே நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சமர்பித்த போது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பாகிஸ்தான், 10 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே அதன் நிலையை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதுடன் தீவிரவாத்தின் மையயமாக செயல்பட்டு வருவது உலக நாடுகள் அறிந்த உண்மை என்றும், இந்தியாவில் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஜனநாயகத்திற்கு இந்தியா முன்மாதிரியாக திகழ்ந்து வருவதை பாகிஸ்தான் ஒரு போதும் உணர்ந்ததில்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.