ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்பட 8 நாடுகளுக்கு 6 மாதம் அவகாசம் அளித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா, சீனா, துருக்கி, ஈராக், இத்தாலி, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 8 நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கான மிகத் தீவிரமான பொருளாதார தடை அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
ஈரான் வருவாய்க்கு முக்கிய ஆதாரமான எண்ணெய் ஏற்றுமதி, நிதிச் சேவைகள் இனி உலகின் எந்த இடத்திலும் செய்ய முடியாது. எனவே ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 6 மாதத்தில் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா கெடு விடுத்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தொலைக்காட்சியில் பேசினார். அப்போது உங்களின் சட்டவிரோதமான, அநியாயமான பொருளாதார தடையை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்துச் செல்வோம் என்றார். வர்த்தக போர் நடக்கும் சூழலில், நாங்கள் கொடுங்கோல் சக்தியை எதிர்த்து நிற்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.