இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாகிறது- அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தியவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குப்பைகளில் போடும் பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் நிலத்தை பாதிப்பதோடு மனிதர்களுக்கு மரபணு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

மக்கள் தொகை அடர்த்தியில் முதலிடம் வகிக்கும் சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி. மண்வளத்தையும், நிலத்தடி நீரின் தன்மையையும் பாதிக்கும் மட்காத குப்பைகளை கையாள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எலக்ட்ரானிக் குப்பைகளைக் கையாளுவது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் எலக்ட்ரானிக் பயன்பாடு மக்களிடத்தில் அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களின் உடல் உழைப்பு குறைய இந்த எலக்ட்ரானிக் பயன்பாடு முக்கிய காரணம். டிவி, பிரிட்ஜ், மாவு அரைக்கும் இயந்திரத்தில் தொடங்கி தற்போது அனைவரது கையிலும் செல்லிடப்பேசி, மலிவான விலையில் கிடைக்கும் வகை வகையான கை கடிகாரங்கள் என எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டன. விதவிதமான எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த ஆர்வம் காட்டும்
நம் மக்கள், அவை வீணானவுடன் முறையாக மறுசுழற்சிக்கு வெளியேற்றுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 70 விழுக்காடு கணிணி சார்ந்த எலக்ட்ரானிக்குப்பைகள்தான். இந்த எலக்ட்ரானிக் பொருட்களை முறையாக வெளியேற்றாமல், சாதாரணமாக குப்பைகளில் போடுவதினாலும், எரிப்பதன் மூலமும் மண்ணில் ஊறி நிலத்தடி நீரையே பாதித்து உடல் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்கிறார் பொது நலன் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.

எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள லெட், கேடியம், க்ரோமியம், ப்ரோமினேட், செலினியம் போன்றவை உடல் உறுப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த நிலையில் அதிகரித்திருக்கும் எலக்ட்ரானிக் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, வீணாகும் மின்னனு குப்பைகளையும் பிரித்து வாங்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

வீடு, நிறுவனங்களில் பயன்படுத்தி வீணான பழைய எலக்ட்ரானிக் பொருட்களை அருகில் இருக்கும் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பயன்படுத்திய மின்னனு குப்பைகளை பாதுகாப்பான முறையில்
வெளியேற்றுவோம்……சுற்றுச்சூழலையும், உடல் நலனையும் காப்போம்.

Exit mobile version