டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு அபராதம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கெனவே 4-க்கு 0 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், 5வது டி-20 போட்டி, மவுண்ட் மவுன்கனி மைதானத்தில் நடைபெற்றது. இதில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம், நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில், கடைசி 20 ஓவர் போட்டியில் விளையாடிய இந்திய அணி, பந்துவீச்சின் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியது தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு ஒரு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 20 சதவீதம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டது.

ஏற்கனவே, நான்காவது போட்டியில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசப்பட்டதால், 40 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version