மதத்தின் பெயரால் பிளக்கப்பட்ட இந்தியா – லட்சக்கணக்கானோரை காவு வாங்கிய பிரிவினை!

லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான இந்திய பாகிஸ்தான் பிரிவினை 74 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் நிகழ்ந்தது. பிரிவினை ஏன் நிகழ்ந்தது என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு ?

ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டி, 1947 ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்படியென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரத்திற்காக தனித்தனியே போரிட்டதா என்றால் இல்லை. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி வரை பாகிஸ்தான் என்ற நாடே கிடையாது. இந்தியர்களிடையே நிலவிய மதப்பிரச்சனை, இந்தியாவை இரண்டாக பிளக்க வைத்தது.

19ம் நூற்றாண்டு இறுதிவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம், மகாத்மா காந்தியின் வருகைக்கு பிறகு மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் அனைத்து மதத்தவரும் காந்தியின் தலைமையில் அணிவகுத்தனர். 1940 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடு இந்த ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த மாநாட்டில் முஸ்லிம்களுக்கென சுதந்திரமான நாடு வேண்டுமென வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்வேறு தலைவர்களும் முஸ்லிம் லிக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தான் நாடு உருவாக வேண்டுமென்பதில் முஸ்லிக் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா உறுதியாக இருந்தார். 1946ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது தொடர்பாக பிரிட்டன் அனுப்பிய தூதுக்குழுவில் இருந்து முஸ்லிம் லீக் விலகியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. கிழக்கு வங்கத்தின் நவகாளி, மேற்குவங்கத்தின் கொல்கத்தா மற்றும் பீகாரில் நடைபெற்ற கலவரங்களில் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் மடிவதைக் கண்டு சகிக்க முடியாமல் தேசப் பிரிவினைக்கு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணங்களை உள்ளடக்கி பாகிஸ்தான் என்ற தேசம் உருவானது. அவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஏறக்குறைய ஒன்றேகால் கோடி மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 5 முதல் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் இறந்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஒற்றுமை மறந்து மதத்தால் வேறுபட்ட மக்களால், இந்த நாடு 74 ஆண்டுகளுக்கு முன் இரண்டாக பிளக்கப்பட்ட தினம் தான் ஆகஸ்ட் 14…

Exit mobile version