ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்த, இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடை அமலில் உள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதனிடையே இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு, 6 மாத கால அவகாசத்தை அமெரிக்கா கொடுத்தது. இந்த அவகாசம் மே 2ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. எனவே, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக சவூதி அரேபியா உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளில் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.