இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்து 757ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2 புள்ளி 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 541 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 10 ஆயிரத்து 413ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 67 ஆயிரத்து 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த 3 லட்சத்து 32 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 174 கோடியே 24 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வெளியிட்டுள்ளன.

அதன்படி, வெளிநாடு செல்கிற தனிநபர்கள், வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோர் அனைவரும் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் உட்பட அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவோருக்கு அறிகுறிகள் இல்லாதபோது கொரோனா பரிசோதனை தேவையில்லை.

அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version