இந்தியா- ஓரு நாள் கொரோனா பாதிப்பு 2.71 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், நாடு முழுவதும் புதிதாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 2 ஆயிரத்து 369 பேர் கூடுதலாகும்.

ஒரே நாளில் 314 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதித்த 15 லட்சத்து 50 ஆயிரத்து 377 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால், பாதிப்பு எண்ணிக்கையும் உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் 23 ஆயிரத்து 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 14 ஆயிரத்து 242 பேர் ஆண்கள் என்றும், 9 ஆயிரத்து 747 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 8 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 854 பேருக்கும், கோவையில் ஆயிரத்து 564 பேருக்கும், திருவள்ளூரில் ஆயிரத்து 732 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Exit mobile version