இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. கடந்த வாரம் திங்கள்கிழமை, ஒரு நாள் பாதிப்பு 33 ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில், அதிவேகமாக பரவும் தொற்று காரணமாக, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பைவிட 40 ஆயிரம் கூடுதல் ஆகும்.
ஒரே நாளில் 146 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 936ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்து 33ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மாகாராஷ்டிராவில் ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.