பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் துல்லிய தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு முன்னர் இதேபோன்று இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தி உள்ளது. அது எப்போது, எதற்காக நடத்தப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்…
2016 செப்டம்பர் 17
2016 செப்டம்பர் 17ஆம் தேதியன்று இரவு, காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவத்தின் டோக்ரா பிரிவினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 17 இந்திய இராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை இருப்பதாக அப்போது தகவல்கள் வெளியாகின.
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
2016 செப்டம்பர் 28
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2016 செப்டம்பர் 28 நள்ளிரவு முதல் 29ம் தேதி அதிகாலை வரையில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் பிரிவினர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி, 7 தீவிரவாத முகாம்களை அழித்து 38 தீவிரவாதிகளை கொன்றனர்.
எல்லைக்கோட்டைத் தாண்டி 2 கி.மீ
எல்லைக் கோட்டைத் தாண்டி, 2 கிலோமீட்டர் உள்ளே நுழைந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துல்லியத் தாக்குதல் என்று சொல்லப்படும் அந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த இரண்டாம் ஆண்டு வெற்றிக் கொண்டாட்டம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் அரசும் அடுத்தடுத்த பதிலடிகளைக் கொடுக்கும் நிலைக்கு இந்திய இராணுவத்தை ஆளாக்குகின்றனர். இரண்டு அணுஆயுத நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டை இது என்பதால் இதனை உலக நாடுகளும் உற்று கவனித்து வருகின்றன.