இந்தியா – சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் இருதரப்பு ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சுமூக தீர்வு காண இருதரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த 6ம் தேதி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் சீனாவின் மால்டோ – சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு 11 மணி நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் இருதரப்பு ராணுவங்களையும் விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சீன ராணுவம் முன்கூட்டியே திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்தும், கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன துருப்புகளை பின்வாங்குவது பற்றியும் இந்திய ராணுவம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.