இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்திய எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல இடங்களுக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் 2,500க்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. அத்துடன் அவர்கள் அப்பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இதன் காரணமாக இந்திய ராணுவமும் லடாக்கில் தனது படைகளை அதிகளவில் குவிக்கத் தொடங்கியது. அத்துடன் இருதரப்பு வீரர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இதனால் கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்த அசாதாரண சூழலை தவிர்க்கும் பொருட்டு, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் 12 முறையும், ராணுவ மேஜர்கள் மட்டத்தில் மூன்று முறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அவற்றில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நவீன் ஸ்ரீவத்சவாவும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் வூ ஜியாங்கோவும் கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் 6ம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எல்லைப் பிரச்னை தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்று முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டுகள் இடையே முன்பு போடப்பட்ட ஒப்பந்தங்களை மனதில் வைத்து, அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடரும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளதால், லடாக் பகுதியில் இருதரப்பு படைகளும் விரைவில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.