7 உலககோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியே காணாத இந்தியா – சிறப்பு தொகுப்பு

12 வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிறன்று மோதவுள்ள நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பரம எதிரிகளான இந்த இரு அணிகள் மோதிய போட்டிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்….

இரு நாடுகளின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 1992 ஆம் ஆண்டு தான் முதல் முதலில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 49 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் இந்திய 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்து. சச்சின் டெண்டுல்கர் மட்டும் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 48 புள்ளி 1 ஓவர்களில், 173 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது, இந்திய விக்கெட் கீப்பர் கிரென் மோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாவத் மியாண்டடை ஸ்டெம்பிங் செய்து அப்பீல் செய்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்தார், இதனால், உற்சாகமடைந்த ஜாவத், கங்காரு போன்று துள்ளி குதித்து இந்திய வீரர்களை வெறுப்பேற்றினார். இந்த நிகழ்வு அப்போதைய ரசிகர்களின் விவாத பொருளாக இருந்தது. இருப்பினும் இந்த உலக கோப்பையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கைப்பற்றியது.

1996 ஆம் ஆண்டு காலிறுதி போட்டியில் இந்த இரு அணிகளும் மீண்டும் மோதியதில், டாஸ்வென்று பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 287 ரன்கள் குவித்தது. நவ்ஜோத் சித்து 93 ரன்கள் விளாசினார். அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியை சந்தித்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில்,இந்திய விக்கெட் கீப்பர் அஜய் ஜடேஜா, பாகிஸ்தானின் அபாயகரமான பந்து வீச்சாளரான வாக்கர் யூனிஸின் கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் விளாசினார். மொத்தம் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த அவர், இந்தியாவின் வெற்றியை எளிதாக்கினார்.

1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகள் 3 வது முறையாக மோதின. உலக கோப்பை போட்டி என்ற எதிர்பார்ப்பை தாண்டியும் இப்போட்டிக்கு அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு காரணம் கார்கில் போர் முடிந்து இரு அணிகளும் உலக கோப்பையில் மோதுவது தான். இங்கிலாந்தின் மான்சென்ஸ்டர் நகரில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. ராகுல் ட்ராவிட், முஹமது அஸாருதீன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதன் பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய பவுலர் வெங்கடேஷ் பிரசாத்தின் அந்த ஆட்டத்தில் நாயகனாக ஜொலித்தார். அவரின் அபார பந்து வீச்சால், 180 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. இதனால் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த வெங்கடேஷ் பிரசாத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையில் இந்தியாவை எதிர் கொண்ட பாகிஸ்தான் முதல் முறையாக டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சயீத் அன்வர் 101 ரன்கள் விளாசினார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானின் பந்து வீச்சை தடுமாற்றத்துடன் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் சிரமப்பட்ட இந்தியா பின்னர் அதிரடியாக ஆட தொடங்கியது. பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்த தருணத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளை எதிர் கொண்டு 98 ரன்கள் சேர்த்தார். 2 ரன்னில் சத்தத்தை நழுவவிட்ட சச்சினின் அவுட்டால், மொத்த ஸ்டேடியமும் நிசப்தமானது. 45 புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 276 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக சச்சினை அவுட் ஆக்க பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி ஃபீல்டிங் அடிக்கடி மாற்றினார். இதனால் சச்சின் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். இதற்காக பாகிஸ்தான் ரசிகர்களிடம் அஃப்ரிடி மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து சச்சினின் ஆட்டம் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கிய நிலையில், பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் பாகிஸ்தானுக்கு இப்போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சச்சின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு 5 வது முறையாக உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி மொஹாலியில் நடந்தது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கடைசி உலக கோப்பையாக அமைந்த இதே போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 35 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் நடந்த இப்போட்டியில், ஒரு பந்து மீதம் வைத்த நிலையில், பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் சச்சின் தான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் தான் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டு உலக கோப்பை கனவை நனவாக்கியது.

இதற்கடுத்து 2015 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் அணிகள் 6 வது முறையாக மோதின. ஆஸ்திரேலியா அடிலெய்டில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 300 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 107 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனார். இதனால் இந்திய 76 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை உலக கோப்பையில் நடந்த 6 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பையில் இதுவரை பாகிஸ்தான் இந்தியாவை வென்றதில்லை என்ற சாதனை தற்போது வரை நீடிக்கிறது. அதேபோல இத்தனை ஆண்டுகாலம் கண்ட தோல்விக்கு பாகிஸ்தானும் பழிதீர்க்க தீவிரம் காட்டி வருகிறது. ஞாயிறன்று நடைபெறும் போட்டி இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் மழை குறுக்கிடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதையும் தாண்டி போட்டி நடைபெறும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பெறுமா அல்லது, இந்தியாவின் ஆதீக்கம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் எழுந்துள்ளது.

Exit mobile version