11 ஆண்டுகளுக்கு பிறகு விராத் கோலியும், கேன் வில்லியம்சனும் உலகக் கோப்பை அரையிறுதியில் நேருக்கு நேர் மோதும் சுவாரஸ்ய சம்பவம் இந்த உலகக் கோப்பை தொடரில் நிகழ்ந்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்கு முன்பாக 2008-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில், விராத் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அப்போது இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையை வென்று அசத்தியது. 11 ஆண்டுகளுக்கு பிறகு கோலி தலைமையிலான இந்தியா அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றன. 2008-ல் நடந்ததை போன்று, நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையை வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.