நேப்பியரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெரும் எதிர்பார்ப்புடன் நேப்பியரில் முதலாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் ஷமி பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் கனே வில்லியம்சன் தவிர மற்ற வீரர்கள் ரன் சேர்க்க தவறியதால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் கனே வில்லியம்சன் 64 ரன்களை எடுத்தார்.
இதனிடையே போட்டி நடைபெறும் நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் சூரிய ஒளியின் காரணமாக ஆட்டம் 39 நிமிடங்கள் தடைபட்டது. வழக்கமாக பந்து வீசும் களங்கள் வடக்கு – தெற்காக அமைந்திருக்கும். ஆனால் போட்டி நடைபெறும் மெக்லீன் பார்க் மைதானம் கிழக்கு – மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இதனால் பேட்டிங் செய்யும் வீரரின் கண்களை சூரிய ஒளி தாக்குவதையடுத்து, நடுவர்கள் போட்டியை சிறிது நேரம் ஒத்தி வைத்தனர். இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கான 158 ரன் என்பது 156 ரன்னாக மாற்றியமைக்கப்பட்டது.
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரை 1-0 என முன்னிலை வகிக்கிறது.