2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பங்கேற்கவுள்ள போட்டிகள் என்ன? வீரர்கள் யார்,யார்?

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

18 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள 115 இந்திய வீரர், வீராங்கனைகள் யார், யார் என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காண்போம்

 

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது ஒலிம்பிக் போட்டி.

2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற போட்டிக்குப் பின்னர், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு இப்போட்டி நடைபெறவிருந்தது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற 23ஆம் தேதி டோக்கியோவில் மிக பிரமாண்டமாக தொடங்குகிறது.

இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் கனவோடு காத்திருக்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவுள்ள அணிகளின் விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தடகளப் போட்டியில் 17 பேர் பங்கேற்கவுள்ள நிலையில்,

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ஆகியோரும்,

ஆயிரத்து 600 மீட்டர் தொடர் ஓட்டத்தில், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முகமது அனாசும், ஓடுகளத்தில் தடம் பதிக்க உள்ளனர்.

வில்வித்தை போட்டி ஆடவர் பிரிவில் தருண்தீப் ராய், அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் ஆகியோரும்,

மகளிர் பிரிவில் தீபிகா குமாரியும் களமிறங்குகின்றனர்.

உலக சாம்பியன் பி.வி.சிந்து, தங்கத்தை தட்டிப்பறிக்க பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரநீத்தும், இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோரும் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

வாள் சண்டையில் பவானி தேவியும்,

குதிரையேற்றத்தில் FOUAAD MIZRAவும் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் ஃபென்சிங் மற்றும் குதிரையேற்றத்தில் இந்தியாவில் இருந்து போட்டியிடும் முதல் போட்டியாளர்கள் இவர்களே.

குத்துச்சண்டையில் பத்மஸ்ரீ மேரி கோம், விகாஸ் கிரிஷன் உள்ளிட்ட 9 பேரும்,

கோல்ஃ ஆட்டத்தில் அனிர்பான் லஹ்ரி, ஆதித்தி அஷோக் ஆகியோரும்,

ஜிம்னாஸ்டிக்கில் பிரனாதி நாயக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், படகுப்போட்டியில் அர்ஜுன் ஜட், அரவிந்த சிங் ஆகியோரும்,

பாய்மரப்படகுப் போட்டியில் நேத்ரா குமணனும் தங்கத்தை வெல்ல துடிப்பாய் உள்ளனர்.

இளம் வீரர்களான திவ்யான்ஷ் சிங் பவார், இளவேனில் வாலறிவன், மனு பக்கர் உட்பட 15 வீரர், வீராங்கனைகள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வெல்ல குறி வைத்துள்ளனர்.

நீச்சல் போட்டியில், சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜன், மானா பட்டேல் ஆகியோரும்,

டென்னிஸ் இரட்டையர் போட்டியில், சானியா மிர்சாவும், அன்கிதா ராய்னாவும் களம் இறங்குகின்றனர்.

இதேபோல், பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானுவும்,

மல்யுத்தப்போட்டியில், சோனம் மாலிக் உட்பட 7 பேரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி மன்பிரீத் சிங் தலைமையிலும், மகளிர் அணி ராணி ராம்பால் தலைமையிலும் பங்கேற்கிறது.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கம், 7 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என 28 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா,

2020 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவிக்கும் கனவோடு களம் காணுகிறது.

139 கோடி மக்களின் கனவை நிறைவேற்றும் வகையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல நாமும் வாழ்த்துவோம்….

Exit mobile version