இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. ஆனால், ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதையடுத்து மழை குறுக்கிட்டதால், போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு முன் நியூசிலாந்து மைதானத்தில் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்திய அணியைப்பொறுத்தவரை, சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுவதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்த போட்டி பெரும் சவலாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், போட்டி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வந்த பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.