இந்தியா – ஜிம்பாப்பே இடையே விசா விலக்கு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 6 நாள் சுற்றுப்பயணமாக 3 ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, சனிக்கிழமை ஜிம்பாப்பே அதிபர் எமர்ஸன் நங்கக்வா மற்றும் துணை அதிபர் கெம்போ மொஹதி ஆகியோரை தனி தனியே சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சுரங்கம், விசா விலக்கு, கலாசாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உயர் பதவியில் உள்ள ஒருவர் ஜிம்பாப்பே நாட்டுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது ஜிம்பாப்பேவில் வசித்து வரும் இந்தியர்களையும் வெங்கய்யா நாயுடு சந்தித்து பேசினார்.