சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1889 நவம்பர் 14ம் நாள் பிறந்த இவர் 1964 மே 27ம் தேதி காலமானார். நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லி சாந்திவனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை குடியரசு தலைவர் அமித் அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.